பழுதடைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் - தூத்துக்குடி சாலையில் விதிகளை மீறும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் இச்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் இச்சாலை வாகைக்குளம் பகுதி வரை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
பத்மநாபமங்கலம் மற்றும் பேட்மாநகரம் பகுதியில் செயல்படும் 15-க்கும் மேற்பட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் ஆலையிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இச்சாலையில் செல்கின்றன.
மேலும், மீனாட்சிப்பட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் தனியார் தொழில்சாலைகள் உள்ளதால் கல்லூரிப் பேருந்துகள் மற்றும் பணியாளர் வாகனங்களும் இச்சாலையில் வந்து செல்கின்றன.
இடதுபுறமாகச் செல்ல வேண்டும் என்ற விதி இருப்பினும், சாலையில் உள்ள மேடு, பள்ளங்களைத் தவிர்ப்பதற்காக வாகனங்கள் திடீரென வலதுபக்கமாகத் திரும்புவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இதனால் வாகனங்கள் பழுதடைகின்றன. எனவே ஸ்ரீவைகுண்டம்- தூத்துக்குடி சாலையில் வாகைக்குளம் பகுதி வரை உள்ள சாலையை சீரமைத்து, தூத்துக்குடிக்கு ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கூடுதலாக அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment