Monday, 4 February 2013

பேட்மா செய்திகள்:பேட்மா நகரத்தை அடுத்த அணியாபரநல்லூர் பிணமாக மீட்கப்பட்ட பெண்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மா நகரத்தை அடுத்த அணியாபரநல்லூர் விலக்கு பகுதியில் ஒரு கல்வெட்டான்குழி இருக்கிறது. அதில் சாக்குமூடை ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு தண்ணீரில் மிதந்தநிலையில் கிடப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.

அதன்பேரில் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையில், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், கைலாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, கல்வெட்டான்குழியில் மிதந்த சாக்குமூடையை வெளியே எடுத்து பிரித்து பார்த்தனர்.

அப்போது அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் பிணம் இருந்தது. பிணத்துடன் பெரிய கல்லும் கயிற்றால் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. பிணமாக மீட்கப்பட்ட பெண் வெளிர் பச்சை நிறத்தில் சுடிதாரும், சந்தன நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். கழுத்தில் சிவப்பு கயிறு மட்டும் கட்டியிருந்தார். பிணம் அழுகிய நிலையில் இருந்ததால் முகத்தை அடையாளம் காண முடிய வில்லை.

அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பெண்ணை யாரோ மர்ம நபர்கள் கொன்று, பிணத்தை சாக்குமூட்டையில் வைத்து கட்டி கல்வெட்டான்குழிக்குள் வீசிச்சென்றுள்ளனர். இளம்பெண் என்பதால் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில், எரிக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பெண் யார்? அவரை கொன்றது யார்? என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தநிலையில் தற்போது 2-வது சம்பவமாக கல்வெட்டான்குழியில் இருந்து சாக்குமூடையில் கட்டி வீசப்பட்ட இளம்பெண்ணின் உடலை போலீசார் மீட்டுள்ளனர். பெண் பிணம் கிடந்த கல்வெட்டான்குழி ஸ்ரீவைகுண்டம்- தூத்துக்குடி மெயின்ரோட்டின் அருகில் உள்ளது.

மேலும் இந்த பகுதியில் ஏராளமான கல்குவாரிகள், தொழிற்சாலைகள், கல்லூரி ஆகியவையும் இருக்கின்றன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருக்கும். முக்கியமாக கல் குவாரிகளுக்கு இரவு-பகலாக லாரிகள் செல்லதும், வருவதுமாகவே இருக்கும். பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இளம்பெண்கள் கொன்று வீசப்பட்டிருப்பது கல்குவாரி மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது தெரிந்தால்தான் கொலையாளிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் கொலை செய்யப்பட்ட பெண்ணை அடையாளம் காண்பதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், கல்குவாரிகளில் வேலைபார்த்த பெண்கள் யாரேனும் காணாமல் போகியிருக்கிறார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

அதேநேரத்தில் பிணமாக கிடந்த அந்த பெண்ணுக்கு 20 வயதுக்கு உள்ளே தான் இருக்கும் என்பதால் கல்லூரி மாணவியா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் மாயமான இளம்பெண்கள் பட்டியலை சேகரித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

No comments:

Post a Comment

linkwithin

Related Posts Plugin for WordPress, Blogger...